என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
- போலீசில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்
- பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையை சேர்ந்தவர் மணி மகள் கார்த்திகா (வயது 19). பி.ஏ. பட்டதாரியான இவர் ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி கீழப்பட்டியைச் சேர்ந்த ராஜா (வயது 37) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் மதுரை அழகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது மகள் கார்த்திகாவை காணவில்லை என்று அவரது தந்தை மணி ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதனை பெற்றுக்கொண்ட ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை, கார்த்திகாவை தேடி வந்தார்.
இந்நிலையில் கார்த்திகாவுடன் அவரை திருமணம் செய்துகொண்ட ராஜா ஆலங்குடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். உடனே ஆலங்குடி போலீசார் இருவீட்டாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
விரைந்து வந்த இரு வீட்டார்களும் தங்களது மகளும், மகனும் பிரிந்து வரவில்லை என்றால் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களுக்கு பிள்ளைகள் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீசார் காதல் ஜோடிகள் இருவருக்கும் சட்டத்திற்கு உட்பட்டு வயது மூப்பை காரணம் காட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறி காதல் ஜோடியை கைகோர்த்து வழி அனுப்பி வைத்தனர்.






