என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை
- விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
- ரூ.1.38 கோடி நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 67 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.
2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1000 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 363 பயனாளிகளுக்கு 411 எக்டர் பரப்பளவில் நுண்ணீ ர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1 கோடியே 38 லட்சம் 81 ஆயிரம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநர் (பொ) சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (வேளாண்மை) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.






