என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளம்பர் தற்கொலை வழக்கில் 4 பேர் கைது - உறவினர்கள் தர்ணா
- பிளம்பர் தற்கொலை வழக்கில் கைதான 4 பேரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு வைரவன் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 36). பிளம்பர். இவர் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்யராஜை கறம்பக்குடியை சேர்ந்த சிலர் தாக்கியதாகவும், அதனால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து சத்யராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் அனுமதித்தனர்.
இந்நிலையில் சத்யராஜ் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கறம்பக்குடியை சேர்ந்த மைதீன் (வயது 24), முகமதுஅசன் (26), ஜபருல்லா (26), ஹாலித் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையறிந்த அந்த 4 பேரின் உறவினர்கள் கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெஜினா பேகம் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.






