என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹாங்காங் பெண்ணை காதலித்து மணந்த புதுக்கோட்டை என்ஜினீயர்
    X

    ஹாங்காங்கை சேர்ந்த செல்சீ கழுத்தில் மணிகண்டன் தாலி கட்டிய போது எடுத்த படம்.

    ஹாங்காங் பெண்ணை காதலித்து மணந்த புதுக்கோட்டை என்ஜினீயர்

    • காதலுக்கு உண்மையான அன்பும், புரிதலும் இருந்தாலே போதும்.
    • கடல் கடந்து காதலித்தாலும் நிச்சயம் கரம்பிடிக்க முடியும்.

    புதுக்கோட்டை :

    காதலுக்கு மொழி, இனம் என்ற பாகுபாடு கிடையாது. காதலுக்கு உண்மையான அன்பும், புரிதலும் இருந்தாலே போதும். கடல் கடந்து காதலித்தாலும் நிச்சயம் கரம்பிடிக்க முடியும். அந்த வகையில், புதுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஹாங்காங் நாட்டில் வேலைக்கு சென்றபோது அங்குள்ள இளம்பெண்ணை காதலித்து தனது சொந்த ஊரிலுள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் காத்தமுத்து என்கிற மணிகண்டன் (வயது 31). என்ஜினீயரிங் முடித்த இவர் ஹாங்காங் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு கடந்த 2 ஆண்டுகளாக சென் என்கிற செல்சீ (27) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடு்த்து செல்சீயை மணிகண்டன் தனது சொந்த ஊரில் முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தார். இதற்கு காதலியின் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஹாங்காங்கில் இருந்து மணிகண்டன் தனது சொந்த ஊருக்கு காதலியின் குடும்பத்தை அழைத்து வந்தார். புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி செல்சீயை மணிகண்டன் நேற்று திருமணம் செய்துகொண்டார். ஹாங்காங்கை சேர்ந்த இளம்பெண்ணாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி அவர் மணமகளுக்குரிய அடையாளமாக சேலை அணிந்திருந்தார். இதேபோல மணமகன் பட்டு, வேட்டி சட்டை அணிந்திருந்தார். மேளதாளம், நாதஸ்வரம் முழங்க காதலி கழுத்தில் மணிகண்டன் தாலிக்கட்டினார். அப்போது கூடியிருந்தவர்கள் மலர் தூவி மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த திருமணம் குறித்து மணிகண்டன் கூறுகையில், ``நான் ஹாங்காங்கில் பணிபுரிந்த இடத்தில் எனது காதலியை சந்தித்தேன். அதன்பின் பேசி பழகியதில் 2 வருடமாக காதலித்தோம். இந்திய கலாசாரப்படி திருமணம் செய்ய முடிவு செய்தோம். அவரது அம்மா, அப்பாவிடம் கேட்டு சம்மதம் வாங்கினோம். அவர்களும் புரிந்து கொண்டு ஒத்துக்கொண்டார்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. ஹாங்காங்கில் இருந்து அவர்களது பெற்றோரும் வந்துள்ளனர். எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

    மணமகள் செல்சீ கூறுகையில், ``எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் நாட்டில் உள்ளதை விட இந்த கலாசாரம் நன்றாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னிடம் அன்பாக பழகினார்கள். என்னை இங்கு எல்லாரும் வரவேற்றார்கள். நல்ல பண்பாக உள்ளது'' என்றார்.

    Next Story
    ×