என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டியை கொன்று நகை பறித்தவர் கைது
- புதுக்கோட்டை அருகே குளிக்க சென்ற மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த வாலிபர் நகையை பறித்தார்.
- மூதாட்டியிடம் இருந்த நகையை பறித்த மாரிமுத்து மூதாட்டியின் காது, மூக்கு, கழுத்தையும் அறுத்துவிட்டு தப்பி சென்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கிருஷ்ணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி ராமாயி. இவரது கணவர் தங்கப்பா பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.
இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்த நிலையில் குடும்பத்தினருடன் ராமாயி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை ராமாயி தனது ஊருக்கு அருகாமையில் உள்ள கிருஷ்ணம்பட்டியில் உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள பம்புசெட்டில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (33) என்பவர் ராமாயியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் இருந்த நகையை பறித்த மாரிமுத்து மூதாட்டியின் காது, மூக்கு, கழுத்தையும் அறுத்துவிட்டு நகையை பறித்து சென்றார்.
இதில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த உறவினர்கள் ராமாயியை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து ராமாயி கூறியுள்ளார்.
இது குறித்து மழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த ராமாயியின் உறவினர்கள் அவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராமாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் பின்னர் ராமாயியின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த மாரிமுத்துவை கைது செய்த மழையூர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான மாரிமுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டாலும், அவர் கட்டிட வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






