என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து 200 பவுன் நகைகள் கொள்ளை
    X

    அரசு டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து 200 பவுன் நகைகள் கொள்ளை

    • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சஞ்சீவ் நகரில் வசித்து வரும் அரசு டாக்டர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்
    • கொள்ளை சம்பவம் நடந்த டாக்டரின் வீடானது காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சஞ்சீவ் நகரில் வசித்து வருபவர் ஆசிக் அசன் முகமது. மருத்துவரான இவர் விராலிமலை அருகேயுள்ள முக்கணாமலைப்பட்டி அரசு மருத்துமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்றிரவு புதுக்கோட்டையில் வசித்து வரும் டாக்டர் ஆசிக்கின் சகோதரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பார்த்து வருவதற்காக டாக்டர் ஆசிக் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டை சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் சகோதரியின் வீட்டிலேயே தங்கிவிட்டார்.

    இதற்கிடையே நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளையர்கள் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நன்கு உறுதி செய்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ஒவ்வொரு அறையாக சென்ற அவர்கள் பீரோ இருந்த அறைக்குள் நுழைந்தனர். தொடர்ந்து பீரோவில் இருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் வெளியே வந்த கொள்ளையர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றுள்ளனர்.

    இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து திரும்பிய டாக்டர் ஆசிக் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை மற்றும் மோட்டார்சைக்கிள் திருடு போயிருந்ததை அறிந்தார். பின்னர் இதுகுறித்து அவர் இலுப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    கொள்ளை சம்பவம் நடந்த டாக்டரின் வீடானது காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் நள்ளிரவில் டாக்டர் ஆசிக் வீட்டின் அருகில் வசித்து வரும் பீர் முகமது என்பவர் வீட்டிலும் இருசக்கர வாகனமும் திருடு போயுள்ளது. மேலும் வடுகர் தெருவில் வசிக்கும் ஆரோக்கியசாமி வீட்டில் 3.5 சவரன் நகை மற்றும் ரூ.20,000 ஆயிரம் பணமும் கொள்ளை போயுள்ளது.

    இலுப்பூர் கண்ணாரத்தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டிலும் 5 பவுன் நகையும், ரூ.30,000 பணமும் கொள்ளை போயுள்ளது. இந்த தொடர் திருட்டு சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள் சம்பவ ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் கொள்ளை நடந்த வீடுகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே விசாரணை நடத்தினார்.

    அடுத்தடுத்து 4 இடங்களில் திருட்டு சம்பவத்தால் இலுப்பூர் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×