என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் மண் கொட்டப்பட்டுள்ள காட்சி.
தார் சாலையை மண் சாலையாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
- பழுதடைந்து அதிக அளவு பள்ளங்களாக மாறிய சாலையை மண் உள்ளிட்டவற்றை கொட்டி மண் சாலையாக மாற்றி வருகின்றனர்.
- இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்ம ம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர்காடு, மூலக்காடு, மணியக்காரனூர் உள்ளிட்ட 5 கிராமப் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கிருந்து தினமும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதி இல்லாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளையும் நம்பி இருந்தனர்.
இந்த கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. 5 ஆண்டுகளாகவே உடைந்து சேதமாகி தரமற்ற சாலையாக மாறிவிட்டது.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடியாத தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டத்தில் இருந்து இயக்கபட்ட அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.
காலை மாலை நேரங்களில் மட்டும் பள்ளி மாணவர்க ளுக்காக ஒரே ஒரு பேருந்து மட்டும் வந்து செல்வதாகவும் மற்ற நேரங்களில் பேருந்து வசதி முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பலமுறை அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரிடமும் முறையிட்டும் இது நாள் வரை எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பழுதடைந்து அதிக அளவு பள்ளங்களாக மாறிய சாலையை மண் உள்ளிட்டவற்றை கொட்டி மண் சாலையாக மாற்றி வருகின்றனர்.
தார் சாலையை சீரமைப்பதை கண்டுகொள்ளாமல் மண் சாலையாக மாற்றி வரும் அவலம் நடைபெற்று வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் கிராம மக்கள் அனைவரும் வேறு வழியின்றி நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் இருசக்கர வாகனங்கள் சரக்கு வாகன ங்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் தான் தங்கள் கிராமத்திற்கு கிடைக்காமல் தவித்து கொண்டிருந்த நிலையில் தற்பொழுது பேருந்து வசதிகளும் கிடைக்காததால் மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும் அனைவரும் பாராமுகம் காட்டி வருவதாக பொதுமக்களும் கம்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் கூறுகின்றனர்.
ஆகையால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தங்கள் பகுதியில் மண் சாலையாக மாற்றி வருவதை தார்சாலையாக மாற்றி சீரமைத்து கொடுத்து மீண்டும் பேருந்து போக்குவரத்தை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.






