என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கல்
    X

    முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுத்தொகை, பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கே.எம்.சரயு வழங்கினார். அருகில் செல்லகுமார் எம்.பி.,மதியழகன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் பரிதா நவாப், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் பலர் உள்ளனர்.

    வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கல்

    • ஆண்கள் பிரிவில் 7,256 பேரும், பெண்கள் பிரிவில் 2,506 பேரும் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2022-23ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லக்குமார் எம்பி., பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநில தடகள சங்க துணைத் தலைவருமான மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற 1,503 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் 44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது, ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை போட்டிகள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 7,256 பேரும், பெண்கள் பிரிவில் 2,506 பேரும் என மொத்தம் 9,762 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் மற்றும் ரூ.30 லட்சத்து 11 மதிப்பிலான பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மேலும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட வெற்றி பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் குறித்த லோகோ மற்றும் குறும்படங்களை தொடங்கி வைத்தனர். பின்னர் பள்ளி மாணவியர்களின் வரவேற்பு நடனம் மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடத்தது.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி அலுவலர் வளர்மதி, நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கதிரவன், சங்கர், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ், தாசில்தார் சம்பத், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கால்பந்து பயிற்றுனர் சுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×