என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளி பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
    X

    தனியார் பள்ளி பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்த காட்சி.    

    தனியார் பள்ளி பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

    • சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
    • இந்நிலையில் பஸ் டிரைவர் குமரன், அதிவேகமாக பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வர, நடுக்கோம்பை பகுதியை சேர்ந்த குமரன் (வயது 48) என்பவர், காலை 8.30 மணியளவில் பள்ளி பஸ்சை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

    காளப்பநாயக்கன்பட்டி, துத்திக்குளம், பாலமேடு, சுட்டபாறைமேடு, இந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு பஸ் வந்து கொண்டிருந்தது. எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பஸ்சில் இருநதனர்.

    இந்நிலையில் பஸ் டிரைவர் குமரன், அதிவேகமாக பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது. வளைவுகளில் தாறுமாறாக ஓட்டியும், வழியில் 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதும் படியும் பஸ்சை இயக்கியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் திருமலைகிரி அருகே பஸ் வந்தபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் மீது குமரன் பஸ்சை மோதினார். பஸ்சில் இருந்த குழந்தைகள் இதை பார்த்து அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் திரண்டனர்.

    சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், பஸ் டிரைவர் குமரன் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    Next Story
    ×