search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தர்மபுரி வக்கீல் கடத்தி கொலை
    X

    தர்மபுரி வக்கீல் கடத்தி கொலை

    • சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சிவகுமாரை அழைத்து வந்த 2 மர்ம நபர்கள்தான் அவரை கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.

    கிருஷ்ணகிரி:

    தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா பொம்மனஹள்ளி அருகே உள்ள அய்யர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சிவகுமார் (வயது47).

    நேற்று 2 மர்ம நபர்கள் சிவகுமாரை சந்தித்து தங்களது கார் போதை பொருள் கடத்தல் வழக்கில் குருபரப்பள்ளி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த காரை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    தனக்கு உரிய கட்டணம் குறித்து அவர்களிடம் பேசி முடிவு செய்த சிவகுமார் தனது ஜூனியர் வக்கீல்களான அருள், கோகுல கண்ணன் ஆகியோருடன் வந்த நபர்களையும் ஏற்றிக்கொண்டு காரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி சுங்க சாவடி அருகே காரை நிறுத்த சொன்ன மர்ம நபர்கள் தங்களது சகோதரர் பறிமுதல் செய்யப்பட்ட காரின் ஆவணங்களை எடுத்து வருவதாகவும் அதனை ஜூனியர் வக்கீல்களை இங்கே இறக்கி விட்டு பின்னால் வாங்கி வரட்டும் என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து தனது ஜூனியர் வக்கீல்கள் 2 பேரையும் அங்கே இறக்கிவிட்டு சிவகுமார் மட்டும் அவர்களுடன் சென்றுள்ளார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யாரும் அங்கு ஆவணங்களை எடுத்துக்கொண்டு வரவில்லை. இதனால் சிவகுமாரின் செல்போனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முயன்ற போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    சிவகுமாரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அருளும், கோகுல கண்ணனும் சிவகுமாரின் மனைவி வனிதாவுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து வனிதா குருபரப்பள்ளிக்கு வந்து போலீசில் புகார் செய்தார். போலீசார் சிவகுமாரை தொடர்பு கொள்ள முயற்சித்து வந்தனர்.

    இந்நிலையில் குருபரப்பள்ளி பகுதியில் ரோந்து வாகனத்தில் சென்ற போலீசார் மர்மமான முறையில் ஒரு கார் தனியாக நின்றதை கண்டு அதை திறந்து பார்த்தனர்.

    அப்போது உள்ளே ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். அவர்கள் இது குறித்து குருபரபள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது பிணமாக கிடந்தவர் சிவகுமார் என்பது தெரிய வந்தது. பின்னர் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    சிவகுமாரை அழைத்து வந்த 2 மர்ம நபர்கள்தான் அவரை கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×