என் மலர்
உள்ளூர் செய்திகள்

விசைத்தறியாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
- விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது.
- ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
சூலூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களுடனான நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று முதல் விசைத்தறியாளர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
சோமனூரில் நடந்த இந்த போராட்டத்தில், சோமனூர், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன், சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறித் தொழில் ஏழைகளை வாழவைக்கும் தொழில். 60 சதவீத கூலி உயர்வு கோரிக்கை நியாயமானது. இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி, முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வி.பி கந்தசாமி எம்.எல்.ஏ. பேசும்போது, விசைத்தறி உரிமையாளர்களுக்கு விரைவில் பிரச்சினையை முடித்து தர வேண்டும். தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதால் விசைத்தறி தொழில் அழிந்து வருகிறது. ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விசைத்தறி தொழில் நசிந்து போகாமல் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இன்று 2-வது நாளாக விசைத்தறியாளர்களின் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. விசைத்தறியாளர்கள் தொடர் போராட்டத்தால், ரூ.600 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசும், ஜவுளி உற்பத்தியாளர்களும் இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணாவிட்டால், தொழில் மேலும் பாதிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.






