search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போரூர்-பவர் ஹவுஸ் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதில் தாமதம்
    X

    போரூர்-பவர் ஹவுஸ் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதில் தாமதம்

    • 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் பகுதி பூந்தமல்லி-கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் இடையே திறக்கப்பட உள்ளது.
    • மொத்தம் 407 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 70 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ.61,843 கோடி மதிப்பீட்டில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.

    வருகிற 2026-ம் ஆண்டுக்குள் பணிகளை முடித்து மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் பகுதி பூந்தமல்லி-கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் இடையே திறக்கப்பட உள்ளது.

    அதன் கட்டுமான பணிகள் வெவ்வேறு ஒப்பந்ததாரர்களால் 2 பகுதிகளாக நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி-போரூர் இடையே ஒரு பகுதியாகவும், போரூரில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை மற்றொரு பகுதியாகவும் பணிகள் நடந்து வருகிறது.

    பூந்தமல்லி-போரூர் இடையே கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் போரூர்-பவர் ஹவுஸ் இடையிலான கட்டுமான பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. மொத்தம் 407 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 70 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    போரூர்-பவர்ஹவுஸ் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் சாலையின் அகலம் குறுகலாக உள்ளது. இதனால் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் போக்குவரத்தை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டும்.

    குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள், மின்சார கேபிள்கள், தொலைபேசி கேபிள்கள் செல்வதால் பணிகள் நடைபெறும் முன்பு அவை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    மேலும் மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடம், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடம் ஆகியவற்றின் இணைப்பு பகுதி ஆழ்வார் திருநகர் மற்றும் ஆலப்பாக்கம் இடையே அமைகிறது.

    எனவே இந்த பகுதியில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். இதனால் போரூர்-பவர் ஹவுஸ் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×