என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
- மது விற்கும் சந்து கடைகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனியாக இடம் தேர்வு செய்து காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சூளகிரி போலீசார் உரிமையியல் வழக்குகளில் தலையிட்டு பொதுமக்களுக்கு தேவையின்றி தொல்லைக் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். கிருஷ்ணகிரி நகராட்சியில் ஏற்கனவே பணிபுரிந்த ஆணையாளர் கடந்த காலங்களில் நடை பெற்ற முறைகேடுகளை கண்டறிந்து தவறு செய்தவர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து எடுத்தார். பின்னர் காரணம் இன்றி ஆணையாளர் பணியிடை மாற்றப்பட்டார்.
இந்த முறைகேடு வழக்குகளை மத்திய அமலாக்க பிரிவு, மத்திய புலனாய்வு துறையும் விசாரித்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணத்தில் குண்டும், குழியுமான சாலைகளை புதுப்பித்து, மது விற்கும் சந்து கடைகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா அருகில், காய்கறி கடைகள் வைத்துள்ளதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தனியாக இடம் தேர்வு செய்து காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தியாகராஜ நாயுடு வரவேற்றார். மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மேகநாதன், மாவட்ட அமைப்புத் தலைவர் திம்மராயன், மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அருள், மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் மோகன்ராம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இஸ்மாயில், மாவட்ட துணைத் தலைவர் சின்னபையன், மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன், மாவட்ட துணை செயலாளர் பொன்னப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ராமலிங்கம் மற்றும் ஒன்றிய செயலா ளர்கள், தலைவர்கள், நகர தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






