search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை சமுத்திரம் ஏரியில் பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரக்கன்றுகள் நடும் விழா - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தஞ்சை சமுத்திரம் ஏரியில் பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரக்கன்றுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நட்டு வைத்தார்.

    தஞ்சை சமுத்திரம் ஏரியில் பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரக்கன்றுகள் நடும் விழா - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • 1 தீவு சுமார் 5000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்த தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன.
    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஏரியானது தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரம் ஏரியில் இன்று வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலர்கள், கவின்மிகு இயக்கம் தஞ்சை சார்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தஞ்சை சமுத்திரம் ஏரி பொதுப்பணித்துறை, கல்லணை கோட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்து சமுத்திரம் ஏரியில் 3 தீவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மரங்கள் நடப்பட்டு அது பறவைகள் வாழ்விடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 1 தீவு சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு அந்தத் தீவில் நந்தியா, பலா, கொய்யா, தேக்கு, பாதாம், வேம்பு, மா உள்பட 32 வகையான மரங்கள் குறிப்பாக பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டன. மேலும் இரண்டு தீவுகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக தீவுகளின் பரப்பளவு 1 ஏக்கர் அளவில் இருக்கும். இந்த தீவுகள் அனைத்திலும் பறவைகள் வாழ்விடங்களுக்கு ஏற்ற மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் இதற்காக உழைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும், கவின்மிகு தஞ்சை நிர்வாகிகளுக்கும் குறிப்பாக டாக்டர் ராதிகா மைக்கேல், பாண்டியன் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமுத்திரம் ஏரி ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சமுத்திரம் ஏரில் போட்டிங், குழந்தைகள் பூங்கா, வியூ டவர் அமைய உள்ளது. இதன் மதிப்பு ரூ.8.8 கோடி ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் மணிகண்டன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கலைச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×