என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி
- விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
- விவசாயிகள் மனு மீது உடனடி நடவடிக்க எடுக்க உத்தரவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துக்கூறி நிறைவேற்ற வலியுறுத்தினர். பின்னர் கலெக்டர் கற்பகம் பேசுகையில், தோட்டக்கலை துறையின் மூலமாக தமிழ்நாடு நீர் பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரம்பரியத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களுக்கு பல்வகைப்படுத்தும் இனத்தில் மிளகாய், கத்தரி, முருங்கை மற்றும் சொட்டு நீர் பாசனம் ஆகிய இனங்களில் பொருள் இலக்காக 13 எக்டர் பொருள் மற்றும் நிதி இலக்காக ரூ.4.20 லட்சமும் பெறப்பட்டு பொருள் இலக்கில் 13 எக்டர் பொருள் மற்றும் நிதி இலக்கில் ரூ.4.20 லட்சமும் சாதனை எய்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 290 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையினை, அடுத்து விவசாயிகள் கூட்டம் துவங்குவதற்கு ஒரு வார காலம் முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும் இனிவரும் காலங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட துறையின் முதல் நிலை அலுவலர்கள் மட்டுமே வர வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் டிஆர்ஓ அங்கையற்கண்ணி, வேளாண்மை இணை இயக்குநர் சங்கர நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






