என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலைமறியல்
குவாரிகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
- கொரட்டகிரி கிராமத்தில் செயல்படும் குவாரிகளை மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ஆனால் இதுவரை குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கொரட்டகிரி கிராமத்தில் 6 குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குவாரிகளுக்குச் செல்லும் லாரிகளால் புழுதி ஏற்பட்டு பள்ளியில் மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதனால் குவாரிகளை மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, குவாரிகளுக்கு லாரிகள் செல்ல வசதியாக மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரிகளை மூட வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கருப்புக்கொடியுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






