என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் இருந்து லாரி மூலம் கொண்டுவரப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்.
கொடைக்கானலில் வாடகை இருசக்கர வாகனம் நிறுத்த எதிர்ப்பு
- ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சைக்கிள் சவாரி, குதிரைசவாரி போன்றவை இடம்பெற்றுள்ளன.
- மோட்டார் சைக்கிள் சவாரி அனுமதிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என எதிர்ப்பு
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சைக்கிள் சவாரி, குதிரைசவாரி போன்றவை இடம்பெற்றுள்ளன. இதேபோல் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்கும் வகையில் தனியார் நிறுவனம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அனுமதி கோரப்பட்டது.
இதுகுறித்து ஆட்சேபணை உள்ளதா என்பது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்திற்கு விளக்கம்கேட்டு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஏரிச்சாலையில் மோட்டார் சைக்கிள் சவாரி அனுமதிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் பதில் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே இன்று மதுரையில் இருந்து ஒரு லாரியில் மோட்டார் சைக்கிள்களை கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் இறக்கி செட் அமைக்க முயற்சி நடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் சைக்கிள் சவாரி நடத்துபவர்கள் ஆகியோர் அங்கு திரண்டு அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நாங்கள் கோர்ட்டு அனுமதி பெயரில்தான் மோட்டார் சைக்கிள் சவாரிக்கு இடம் தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் தாங்கள் இதற்கு ஆட்சேபணை தெரிவித்து கடிதம் அனுப்பி விட்டதாகவும், அனுமதியின்றி உங்களுக்கு இந்த இடத்தில் இடம் கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பினர். அதன்பின்னர் அவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள்களை லாரியில் ஏற்றி திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.






