என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தத்து கொடுத்த குழந்தையை திரும்ப வாங்கிய பெற்றோர்
    X

    தத்து கொடுத்த குழந்தையை திரும்ப வாங்கிய பெற்றோர்

    • கட்டிட தொழிலாளி பழனிசாமி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு திருமண மாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • பிரேமாவுக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை சீனிவாசன்- கனகரத்தினம் தம்பதி முறைப்படி தத்தெடுத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பழனிசாமி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு திருமண மாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    பழனிசாமியின் வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை என்பதால் பிரேமா பூ கட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது உறவின ரான சேலம் அரியாகவுண்டம் பட்டியை சேர்ந்த சீனிவாசன்-கனக ரத்தினம் தம்பதிக்கு, திருமணமாகி 25 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை.

    இதையடுத்து, கண்ணன் மூலம், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முயன்றனர். இதுகுறித்து கண்ணன், பக்கத்து வீட்டில் வசித்து வரும் பிரேமாவிடம் கூறியுள்ளார். உனக்கு பிறக்கும் குழந்தையை உறவினர்கள் தத்தெடுக்க ஆர்வமாக இருக்கி றார்கள் என தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கடந்த மாதம் பிரேமாவுக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை சீனிவாசன்- கனகரத்தினம் தம்பதி முறைப்படி தத்தெடுத்தனர். ஆனால், குழந்தையை பிரிந்து இருக்க முடியாமல், பிரேமா தவித்து வந்துள்ளார். குழந்தையை மீண்டும் பெற்றுத் தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் முறையிட்டனர். இதன்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார், தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து, குழந்தை தத்தெடுப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனே, குழந்தையை கொடுத்த தம்பதியினரையும், தத்தெடுத்த தம்பதியினரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தத்தெடுத்த தம்பதி, குழந்தையை ஒப்படைத்தனர்.

    பிரேமா மகிழ்ச்சியுடன் குழந்தையை வாங்கிச் சென்றார். ஒரு மாதம் பாசமாக வளர்த்த குழந்தையை திருப்பிக் கொடுத்த கனக ரத்தினம் கண்ணீர் விட்டு அழுதது, அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.

    Next Story
    ×