search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதி  வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
    X

    வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

    பரமத்திவேலூர் பகுதி வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

    • வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெல்லம் தயாரிக்க பல்வேறு வகையான ரசாயனம் மற்றும் அஸ்கா கலப்பதாக நாமக்கல் கலெக்டருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அனுப்பியிருந்தனர்.
    • கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெல்லம் தயாரிக்க பல்வேறு வகையான ரசாயனம் மற்றும் அஸ்கா கலப்பதாக நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அனுப்பியிருந்தனர். இதை அடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் அலுவலர்கள் சிங்காரவேல், மனோகரன், கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    20-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு நடந்தது. அப்போது வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த சுமார் 10 மூட்டை அஸ்கா பறிமுதல் செய்தனர். மேலும் அஸ்கா கெமிக்கல் கலந்த 1050 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்தனர். 4 ஆலை கொட்டகைகளில் வெல்லம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர் .

    பின்னர் பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏல மார்க்கெட்டில் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கு மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும்ஆலைக் கொட்டகை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் பேசுகையில். வெல்லம் தயாரிக்க கலப்படத்தை தவிர்க்க வேண்டும். அஸ்கா மற்றும் கெமிக்கல் கொண்டு வெல்லம் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெல்லம் தயாரிக்கும் பணியில் அடுப்பு எரிக்கும் போது வேஸ்ட் துணி மற்றும் டயர்களை பயன்படுத்தக் கூடாது. அனைத்து ஆலைகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட வேண்டும். வெல்லம் தயாரிக்கும் ஊழியர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×