search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் : சின்னவெங்காயம்  கிலோ ரூ.150க்கு விற்பனை - சில்லறை கடைகளில் ரூ.200-ஐ தாண்டியது
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட வெங்காயம்.

    ஒட்டன்சத்திரம் : சின்னவெங்காயம் கிலோ ரூ.150க்கு விற்பனை - சில்லறை கடைகளில் ரூ.200-ஐ தாண்டியது

    • வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இன்று உச்சகட்ட விலையாக தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனையானது.
    • தக்காளி, வெங்காயத்தைப் போன்றே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டாகும். இந்த மார்கெட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சில்லறை விற்பனைக்காகவும் மொத்த விற்பனைக்காகவும் ஏற்றுமதியாவது வழக்கம்.

    இதனால் தினந்தோறும் இந்த மார்க்கெட்டில் சுமார் ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்து போன காரணத்தாலும், அதிகப்படியாக வெயிலின் தாக்கத்தாலும், ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் வரத்து இல்லாமல் போனது.

    இதனால் வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து இன்று உச்சகட்ட விலையாக தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனையானது. தினந்தோறும் ஒவ்வொரு கடைகளுக்கும் 50 டன் வரக்கூடிய சின்ன வெங்காயம் தற்போது ஒரு டன் அளவு கூட வராமல் குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வெங்காயம் இங்கிருந்து வண்டி வாடகை, ஏற்று கூலி மற்றும் இதர செலவுகள் என சில்லறை விலையில் ரூ.200ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால் அன்றாட தேவைக்கு வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிப்படையக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே தக்காளி விலை உயர்வால் அதனை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து அரசு தற்போது ரேஷன் கடைகளில் ரூ.60க்கு விற்பனை செய்து வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயத்தையும் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு மாத காலத்திற்கு இருக்கும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தக்காளி, வெங்காயத்தைப் போன்றே காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

    Next Story
    ×