என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்முறை தேர்வு ஆய்வகங்களில் தொழில்நுட்ப குளறுபடிகளை சரி செய்ய உத்தரவு
- பிரத்யேக டோல் பிரீ எண் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- பறக்கும் படை அலுவலர் நியமித்தல் என தேர்வு சார்ந்த பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
திருப்பூர் :
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு தலா 10 கம்ப்யூட்டர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா 20 கம்ப்யூட்டர்களுடன் புரொஜெக்டர், இணையதள வசதி கொண்ட ஹைடெக் ஆய்வகம் அமைத்து தரப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதால் பராமரிப்பு பணிகளையும், அந்நிறுவனமே சுழற்சி முறையில் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரத்யேக டோல் பிரீ எண் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின் ஆய்வகங்கள் முறையாக பராமரிக்காமல் இருப்பதாக புகார் எழுந்தது. தொழில்நுட்ப குழு சார்பில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் பொதுத்தேர்வு துவங்கவுள்ளதால் மீண்டும் ஆய்வகத்தில் ஏதாவது தொழில்நுட்ப குளறுபடிகள் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வு மார்ச் 1 -ந்தேதி துவங்கி, 9ந் தேதி வரை நடக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ள பள்ளிகளில் பிரத்யேக ஆய்வகம் உள்ளது. ஆனால் பழைய கம்ப்யூட்டர்கள் இருப்பதோடு அவற்றில் சில பழுந்தடைந்துள்ளதாக ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஹைடெக் ஆய்வகத்திலே கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு மாணவர்களுக்கான செய்முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தொழில்நுட்ப குளறுபடிகள் இருப்பின் உடனே சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 13ந் தேதி துவங்கி ஏப்ரல் 3ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக பொதுத்தேர்வு மையங்கள் அமைத்தல், ஆய்வு செய்தல், கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர் நியமித்தல் என தேர்வு சார்ந்த பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு எண் உட்பட பல்வேறு தகவல்கள் உள்ளீடு செய்வதற்கு, முகப்புத்தாள் அச்சிடப்பட்டு விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படுகிறது.இதற்கான முகப்புத்தாள் தேர்வுத்துறையால் மாவட்ட வாரியாக வினியோகிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில் முகப்புத்தாளை விடைத்தாளுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடவாரியாக தேர்வுத்துறையின் விதிமுறைகளை பின்பற்றி, முகப்புத்தாள் இணைப்பதோடு, விடைத்தாள்களை பாதுகாப்புடன் வைக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.