search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர்  சதுர்த்தியையொட்டி   பூக்களின் விலை தருமபுரியில் கிடுகிடு உயர்வு
    X

    விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை தருமபுரியில் கிடுகிடு உயர்வு

    • குண்டுமல்லி கிலோ ரூ.1000-க்கு விற்பனையானது.
    • பன்னீர் ரோஸ், உள்ளிட்ட அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக இருந்து வருவது விவசாயம், இதில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்கின்றனர்.

    அதிகப்படியாக குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, முல்லை, காக்கனா, கோழிக்கொண்டை, பன்னீர் ரோஸ், உள்ளிட்ட அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தொடர்ந்து மாவட்டத்தில் திருமண வைபவங்கள், உள்ளூர் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள், கோவில் கும்பாபிஷேகம்,என நடைபெற்று வந்தது. பூக்களின் விலை அதிகரித்திருந்த நிலையில் ஆடி மாதத்தில் பூக்களின் விலை கிடுகுடு சரிவை ஏற்படுத்தியது. அதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    தற்பொழுது ஆடி மாதம் முடிந்து ஆவணி பிறந்துள்ளதால் திருமண வைபவங்கள் கோவில் விழாக்கள் என தொடங்கியது. மேலும் நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் சராசரி விலையை விட இன்று பூக்களின் விலை மேலும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

    இன்று தருமபுரி பூ மார்க்கெட்டில் மாலைகளுக்கு பயன்படும் சம்பங்கி பூ கிலோ 200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ 160 ரூபாய்க்கும், அரளி கிலோ 250 ரூபாய்க்கும், குண்டு மல்லி கிலோ 1000 ரூபாய்க்கும், முல்லை கிலோ 700 ரூபாய்க்கு, சாமந்தி கிலோ 120 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது‌.

    இது சம்பந்தமாக விவசாயிகள் கூறும்போது கடந்த ஆடி மாதம் முழுவதும் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறாததால் பூக்களின் விலை படு வீழ்ச்சி அடைந்தது. பூக்களை பறிப்பதற்கான கூலி கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம், ஆடி மாதம் முடிவடைந்ததை அடுத்து தற்பொழுது பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    மேலும் விநாயகர் சதுர்த்தி என்பதால் அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    Next Story
    ×