என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி நிறைவு விழாவையொட்டி பல்வேறு வகையான பூக்கள் தட்டுடன் ஊர்வலமாக வந்த பக்தர்களை படத்தில் காணலாம். விழாவில் செம்பால் தயாரிக்கப்பட்ட சிறப்பு டாலர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
வசந்த நவராத்திரி விழாவை ஒட்டிசேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 2ஆயிரம் பேருக்கு செப்பு டாலர் விநியோகம்
- மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, சுயம்புவாக எழுந்தருளிய சுகவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
- சொர்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு விதமான சிறப்பு விழாக்கள் நடைபெறும்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, சுயம்புவாக எழுந்தருளிய சுகவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விதமான சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறும்.
சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் சொர்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு விதமான சிறப்பு விழாக்கள் நடைபெறும். சொர்ணாம்பிகை தாயாருக்கு ஆண்டுதோறும் 5 நவராத்திரிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியும் மிகவும் பிரசித்தி பெற்ற விழாக்காலமாகும்.
அதன்படி, பங்குனி மாதத்தின் வசந்த நவராத்திரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.
வசந்த நவராத்திரி முதல் நாள் லட்சார்ச்சனை தொடங்கி, நாள்தோறும் 10 ஆயிரம் அர்ச்சனை செய்யப்பட்டது. இறுதி நாளான லட்சார்ச்சனை நிறைவு நாளை முன்னிட்டு, அதிகாலை முதல் சுகவனேஸ்வரருக்கும், சொர்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலையில் கோ பூஜை செய்யப்பட்டு, பின்னர் 500 கிலோ பூக்கள் மற்றும் செம்பு டாலர்களுடன் மேள தாளம் முழங்க திருக்கோவிலை பக்தர்கள் வலம் வந்தனர். பின்னர், சொர்ணாம்பிகை தாயாருக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் என பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்த பின் தங்க கவச சாத்துப்படி செய்து அரளி, சாமந்தி, தாமரை, ரோஜா உள்ளிட்ட 500 கிலோ வாசனை மலர்களால் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க லட்சார்ச்சனை முடிவுற்றது.
தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட, சொர்ணாம்பிகை தாயாரின் உருவம் பதித்த செம்பு டாலரை அம்மனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வசந்த நவராத்திரி வைபவத்தை காண பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் சொர்ணாம்பிகை தாயாரின் உருவம் பதித்த டாலர் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.






