search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி  தருமபுரி மாவட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா  -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தருமபுரி மாவட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    • இறைவனின் அற்புத ரூபத்தை தரிசிக்கக் கூடிய நாள் என்றால் அது ஐப்பசி மாத பவுர்ணமி தான்.
    • பலகாரங்களைக் கொண்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

    தருமபுரி,

    ஐப்பசி மாதம் பெளர்ணமி திதி சிவ பெருமானின் லிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அபிஷேக பிரியரான சிவ பெருமானுக்கு 11 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னா பிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனின் அற்புத ரூபத்தை தரிசிக்கக் கூடிய நாள் என்றால் அது ஐப்பசி மாத பவுர்ணமி தான்.

    அதனால் தான் இறைவனுக்கு அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து, ஒவ்வொரு பிடி அன்னத்திலும் சிவலிங்கத்தை காணும் வழக்கத்தை நமது முன்னோர்கள் வகுத்துள்ள னர்.

    உணவை வீணடிப்பது என்பது மிகப் பெரிய பாவம். உணவு, இறைவனுக்கு சமமானது என்பதை உணர்த்துவதற்காகவே அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அதை புனிதமான பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கி றார்கள்.

    அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் அனைத்திலும் அன்னா பிஷேகம் நடைபெற்றது. தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் சிவாலயத்தில் 30 கிலோ அரிசி சாதத்தால் அண்ணா அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் மகாலிங்கேஸ்வரர் அன்னத்தால் அலங்கரிக் கப்பட்டு சிறப்பு தீபாரா தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு அபிஷேகம் செய்த சாதத்தில் தயிர் சாதம் செய்து பிரசாதமாக வழங்கப்பட்டது.

    புகழ்பெற்ற தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்கார சேவை நடைபெற்றது.

    இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா ணேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பட்டது. பின்னர் சாமிக்கு அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது.

    தருமபுரி குமார சாமிப் பேட்டை சிவகாம சுந்தரி உடனா கிய ஆனந்த நடராஜர் கோவி லில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னத்தால் அலங்காரம் நடைபெற்றது.

    இதேபோல் தருமபுரி ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி அம்பாள் உடனாகிய ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னம் மற்றும் பல்வேறு வகையான பலகாரங்களைக் கொண்டு சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

    தருமபுரி பூபதி திருமண மண்டபம் பின்புறம் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவில், பழைய தருமபுரி கருணை நாதர் கோவில், புட்டி ரெட்டிபட்டி சோமநாதர் கோவில் ஆகிய கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    தருமபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தருமபுரி அடுத்த சவுலுப்பட்டியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×