என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேடயம்
- தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பாட்டு போட்டி, சுவரொட்டி வரைதல் போட்டிகள் நடந்தது.
- 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான பாட்டு போட்டி, சுவரொட்டி வரைதல் போட்டிகள் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற 12 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற 12 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கோலப்போட்டியில் வெற்றி பெற்ற 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.19 ஆயிரம் மதிப்பில் ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மயிலாட்டம், ஒயிலாட்டம், பம்பை இசை நிகழ்ச்சியுடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் 300 கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, பெங்களூரு சாலை வழியாக அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியை அனைத்து அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.






