search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க 4-வது நாளாக  வனத்துறையினர் கண்காணிப்பு
    X

    நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க 4-வது நாளாக வனத்துறையினர் கண்காணிப்பு

    • நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்jது.
    • மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்து விட்டதாக கிடைத்த தகவலையடுத்து நெல்லை வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

    வீடுகளிலேயே முடங்கிய மக்கள்

    நாங்குநேரி பெரியகுளத்தின் கரை, மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, வாழை வயல்களுக்குள் கரடியின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கரடியை பிடிக்க 2 கூண்டுகள் வரவழைத்து அதனை 2 இடங்களில் வைத்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    போக்குகாட்டும் கரடி

    4-வது நாளாக இன்றும் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கரடிக்கு பிடித்தமான பழ வகைகளை கூண்டில் வைத்து அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால் கரடி கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.

    இந்நிலையில் நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கரடியை விரைந்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து இன்று வனத்துறை அதிகாரிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதூர் பகுதியில் வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கரடியின் நடமாட்டம் புதூர் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் கரடியை பிடித்து விடுவோம்." என்றனர்

    Next Story
    ×