search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரயுமன்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
    X

    இரயுமன்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது
    • தூத்தூர் பகுதியில் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் உள்ளனர். எனவே தூத்துர் பகுதியில் உதவி இயக்குனர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்

    நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டன்ஸ்டன் தலைமையில் மீனவ பெண்கள் கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில், ஓமன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கோவளம் மீனவர்கள் உட்பட 17 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். பின்னர் மீனவர்கள் கூறியதாவது:-

    தூத்தூர் பகுதியில் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் உள்ளனர். எனவே தூத்துர் பகுதியில் உதவி இயக்குனர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்போது இரயுமன்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இரயுமன்துறை பகுதியில் உதவி இயக்குனர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் மீனவர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரி சின்ன குப்பன் கூறுகையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை பொறுத்தமட்டில் மக்கள் தொடர்பு கொள்ள வசதியான இடத்தில் அமைக்க வேண்டும். எனவே தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் பிரச்சனைக்காகத்தான் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தனிப்பட்ட பிரச்சனைகளை கூட்டத்தில் தெரிவிக்க கூடாது. மீனவர் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்குவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இரயுமன் துறை, தூத்தூர் பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் 6 மாதம் ஆகியும் மண்எண்ணை வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு 6 மாதங்கள் ஆன பிறகும் நாகர்கோவிலுள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். புரோக்கர்கள் கொடுத்தால் ஒரு மாதத்தில் மண்எண்ணை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். மீனவர்களை கண்டு கொள்வதில்லை.எனவே அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் ஜூன் மாதம் 3 வள்ளங்கள் விபத்துக்குள்ளானது. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவளத்தில் ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், மானிய விலை மண்எண்ணை விண்ணப்பித்த மீனவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் நடந்த விபத்தில் 2 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு படகு பதிவு செய்யப்படாதது ஆகும். சம்பந்தப்பட்ட வள்ளங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரயுமன்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.30 கோடியும் துறைமுகத்தை தூர்வார ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மீனவர்பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர் சகாயம் மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி முதல் பள்ளம் இணைப்பு சாலையும், இரயுமன்துறை-வள்ளவிளை இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் கடற்கரை பகுதியில் கெட்டப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் குமரி மாவட்டத்தில் ரூ.55 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி தூண்டில் உள்ள அமைக்கப்படாமல் காணாமல் போய் உள்ளது. அது குறித்த முழு விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    Next Story
    ×