என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தின் மாதிரி வரைபடம்.
மெட்ரோ ரெயில் நிலையத்துக்காக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே இடம் ஒதுக்கப்படுகிறது
- கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு எங்கு இடம் ஒதுக்குவது என்பது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
- மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.
இந்த பஸ் நிலையத்தை சென்னையின் அனைத்து பகுதிகளுடன் இணைக்கும் வகையில் இந்த பஸ் நிலையத்துக்கு சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் மாநகர பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளன. அதற்கான இடவசதியும் இந்த பஸ் நிலையத்தில் உள்ளது.
மேலும் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே புதிய மின்சார ரெயில் நிலையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மின்சார ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு செல்ல ஆகாய நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்த வசதியாக சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி 15 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. இதற்கு ரூ.4080 கோடி செலவாகும்.
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு எங்கு இடம் ஒதுக்குவது என்பது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பிரதான கட்டிடத்தின் முகப்பு பகுதிக்கு எதிரில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இடம் ஒதுக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து பஸ்கள் மற்றும் வாகனங்கள் வருவதற்கான பாதையை ஒட்டி இந்த மெட்ரோ ரெயில் நிலையம் அமைகிறது. அதன் அடிப்படையில் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.