என் மலர்
உள்ளூர் செய்திகள்

எச்சரிக்கை பலகை எதுவும் இன்றி பாலங்கள் கட்டுவதற்கான கட்டுமான இரும்பு கம்பியில் ஆங்காங்கே நீட்டிக்கொண்டு நிற்கிறது.
சோலைக்கொட்டாய் அருகே சாலை விரிவாக்க பணியில் உள்ள குளறுபடியால் சேறும், சகதியுமாக மாறிய நெடுஞ்சாலை
- சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
- பாதுகாப்பு எச்சரிக்கை, வழிகாட்டி விதிமுறைகளை ஏற்படுத்தி தரவும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக புயல் காரணமாக தொடர் மழை பெய்தது. தற்போது தருமபுரியில் இருந்து அரூர் செல்லும் நெடுஞ்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சோளக்கொட்டாய், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, மொரப்பூர், அரூர் வரை செல்லும் நெடுஞ்சாலை தற்போது சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாலை இரு புறமும் உள்ள மரங்கள், கட்டிடங்கள், சிறு சிறு பாலங்கள் போன்றவை அகற்றப்பட்டும், மேடான மற்றும் தாழ்வான பகுதிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் இருந்து அகற்றப்படும் மண் குவியல்கள் தற்போது சாலை முழுவதும் சிதறி கிடப்பதால் சேறும் சகதியுமாக நெல்வயல் போல் மாறியுள்ளது. தினமும் வேலைக்கு செல்வோர், இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்வது மிகவும் ஆபத்தான பயணமாகவே உள்ளது. சிலர் ஆங்காங்கே சேற்றில் சிக்கி கீழே விழும் நிலையும் தொடர்கிறது.
வெட்டி எடுக்கப்பட்ட மரங்களின் துண்டுகள் போக, அடித்துண்டுகளின் வேர்கள் அகற்றப்படாமல் சாலை ஓரம் ஆங்காங்கே ஆபத்தான முறையில் விடப்பட்டுள்ளது. பாலங்கள் கட்டுவதற்கான கட்டுமான இரும்பு கம்பியில் ஆங்காங்கே நீட்டிக்கொண்டு நிற்கிறது. இவைகளைக் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதற்கான எச்சரிக்கை பலகை எதுவும் இல்லை.
மேலும் பாப்பிரெட்டிப்பட்டி அரூர் பகுதிகளில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் மேல் சிகிச்சைக்காக தரு மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரவேண்டிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்த வழியாக செல்வதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.
எனவே சாலையில் படிந்துள்ள மண்குவியல்களை அகற்றவும் பாலம் வேலைகள் நடைபெறும் இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மாற்று சாலை சீர்படுத்தி தரும்படியும், பாதுகாப்பு எச்சரிக்கை, வழிகாட்டி விதிமுறைகளை ஏற்படுத்தி தரவும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.