என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொம்மிடி அருகே   நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கிய  சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் மறியல்
    X

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    பொம்மிடி அருகே நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கிய சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் மறியல்

    • நில உரிமையாளர்கள் தங்கள் நிலப்பகுதியை மண்கொட்டி உயர்த்தி வைத்து கொண்டனர்.
    • இப்பகுதியில் பெய்ததால் தாழ்வான பகுதி என்பதாலும் ஊரில் ஒட்டுமொத்த மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து சுமார் 5 அடி உயரத்திற்கு சாலையில் தேங்கி நின்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள துரிஞ்சிப்பட்டியில் மாரியம்மன் கோவில் தெரு, கடைவீதி, போயர் தெரு, காலனி என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் அனைத்தும் துரிஞ்சிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலையில் குறுக்கே நீண்ட நாட்களாக கழிவுநீர் சென்று வந்தது.

    இந்த நிலையில் சில ஆண்டுகளாக தங்கள் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி அருகில் உள்ள நில உரிமையாளர்கள் தங்கள் நிலப்பகுதியை மண்கொட்டி உயர்த்தி வைத்து கொண்டனர்.

    இதனால் ஊரின் ஒட்டு மொத்த சாக்கடை நீரும் நெடுஞ்சாலையில் ஏரி போல் நின்று விடுகின்றது. இதே நிலை கடந்த சில மாதங்களாக நீடிக்கின்றது.

    இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக நல்ல மழை இப்பகுதியில் பெய்ததால் தாழ்வான பகுதி என்பதாலும் ஊரில் ஒட்டுமொத்த மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து சுமார் 5 அடி உயரத்திற்கு சாலையில் தேங்கி நின்றது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்களும், அருகில் உள்ள பள்ளி, மாணவ, மாணவியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், தி.மு.க ஒன்றிய மேற்கு செயலாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள சிலர் கழிவு நீர் செல்வதற்கு பாதை விடாமல் தடை ஏற்படுத்தி வருவதாகவும், விரைவில் இப்பகுதியில் கால்வாய் அமைப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும், அந்த பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

    இதை அடுத்து கழிவு நீர் தற்காலிகமாக வெளியேறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டனர்.

    இதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×