என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூர் அருகே ஓய்வு பெற்ற செவிலியரை கத்தியால் தாக்கி சங்கிலி பறித்தவர் போலீசில் சிக்கினார்
- பானுமதி வீட்டிற்கு சென்ற மசூத்கான், கத்தியை காட்டி மிரட்டி பானுமதியை பலமாக தாக்கியுள்ளார்.
- கழுத்தில் அணிந்திருந்த ரெண்டரை பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடியை சேர்ந்தவர் பானுமதி (வயது 65). ஓய்வு பெற்ற செவிலியர். இவரது கணவர் ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகிறார்.
பானுமதி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் யாஸ்மின். இவரது தம்பி மசூத்கான் (35). ஆட்டோ டிரைவரான இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த, 31-ந்தேதி மசூத்கான், மல்லப்பாடியிலுள்ள யாஸ்மின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அருகில் வசிக்கும் பானுமதி வீட்டிற்கு சென்ற மசூத்கான், கத்தியை காட்டி மிரட்டி பானுமதியை பலமாக தாக்கியுள்ளார். அவர் கழுத்தில் அணிந்திருந்த ரெண்டரை பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். படுகாயமடைந்த பானுமதி பர்கூர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு கழுத்தில், 24 தையல்கள் போடப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசுக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து பானுமதி தந்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மசூத்கானை நேற்று கைது செய்தனர்.






