search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அந்திவாடி மைதானம் அருகே  திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் அமைக்க விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு
    X

    ஓசூர் அந்திவாடி மைதானம் அருகே திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் அமைக்க விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு

    • ஸ்டேடியம், 7.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும்.
    • நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகரில் விளையாடுவதற்கென்று உள்ள விளையாட்டு மைதானம், தளி சாலையில் உள்ள அந்திவாடி ஸ்டேடியம் ஆகும். இந்த ஸ்டேடியம், 7.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும்.

    இந்த ஸ்டேடியத்தை ஒட்டி, சுமார் 45 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அந்திவாடி ஸ்டேடியத்தையும், அருகில் உள்ள அரசு நிலத்திலும் அனைத்து விளையாட்டு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில், திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அதே பகுதியில் 1 ஏக்கர் நிலத்தில் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், திட கழிவுகள் பிரிக்கும் கட்டிடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பகுதியில் அந்த கட்டிடம் கட்டப்பட்டால் துர்நாற்றம் வீசுவதுடன் மட்டுமல்லாமல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக உருவாக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    எனவே, இந்த பகுதியில் திட கழிவுகள் பிரிக்கும் கட்டிடம் கட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், நடைபாதை பயிற்சியாளர்கள் சங்க தலைவர் மல்லேஷ், செயலாளர் லிங்கம் ஆகியோர் தலைமையில் விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சியாளர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×