என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தேர்த் திருவிழா
- ஸ்ரீ ஆஞ்சநேயரால் கொண்டுவரப்பட்ட சாலகிராமம், நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம்.
- ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 கோவில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.
நாமக்கல்:
நாமக்கல்லில் ஸ்ரீ ஆஞ்சநேயரால் கொண்டுவரப்பட்ட சாலகிராமம், நாமக்கல் நகரின் மையத்தில் ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம். இந்த மலையின் மேற்குப்பகுதியில் ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை ஸ்ரீ நரசிம்மர் கோவில் மலையைக் குடைந்து குடவறைக் கோவிலாக உள்ளது.
மலையின் கிழக்குப்பகுதியில் அரங்க நாயகித் தாயாரோடு கூடிய ஸ்ரீ அரங்கநாதர் கோவில் குடவறைக்கோ விலாக உள்ளது. இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனம் கொண்ட நிலையில் அரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒரே கல்லினால் உருவான மலையியின் இரண்டு புறமும் குடவறைக் கோவில்களை கொண்டு, சிறப்பு பெற்ற தலமாக நாமக்கல் விளங்கி வருகிறது.
கோட்டை பகுதியில், மலைக்கு மேற்குப்புறத்தில் 18 உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் நாமக்கல் மலையையும், ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 கோவில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு, ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழா நாட்களில் தினசரி காலை 8 மணிக்கு நரசிம்மசுவாமி கோவிலில் இருந்து ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ அரங்கநாதரும் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். பகல் 11 மணிக்கு மெயின்ரோட்டில் குளக்கரை நாமகிரித்தாயார் திருமண மண்டபத்தில் ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு மீண்டும் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
7-ம் நாள் திருவிழாவான, வருகிற ஏப்ரல் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நாமகிரித்தாயார் திருமண மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பாகும். 8-ம் நாள் திருவிழாவில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபரி உற்சவம் நடைபெறும்.
9-ம் நாள் திருவிழாவில் முப்பெரும் தேரோட்டம் நடைபெறும். காலை 9 மணிக்கு கோட்டையில் ஸ்ரீ நரசிம்மசுவாமி தேரோட்டம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மெயின் ரோட்டில் அரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேரோட்டம் நடைபெறும். 15-ம் நாள் உற்சவமாக வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறும்.
விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலை யத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், நாமக்கல் நகர மக்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.






