என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே பெட்ரோல் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கீழ்வேளூர்:

    நாகையை அடுத்த நாகூர் மெயின் ரோட்டில் நேற்று போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பழைய பெட்ரோல் பங்க் அருகில் அனுமதியின்றி ஒருவர் பெட்ரோல் விற்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கீழ்வேளூர் அடுத்த செங்கரை பகுதி மகாதான தெருவை சேர்ந்த பசுபதி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறையில் 3 வீடுகளில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை திருவிழந்தூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் மோகன்தாஸ்(40). இவர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் தீ அருகில் இருந்த ஜெயசுதா, மூர்த்தி ஆகியோர் வீடுகளுக்கும் பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். அதற்குள் மோகன்தாஸ், ஜெயசுதா, மூர்த்தி ஆகியோர் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

    ஜெயசுதாவின் மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 25 பவுன் நகையும் தீயில் நாசமாகியது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கியாஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை மீன்பிடி இறங்குதளம் அருகே கடற்கரையில் அழுகிய நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது.

    வேதாரண்யம்:

    கோடியக்கரை கடல் பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை டால்பின் மீன்கள் வந்து செல்வது வழக்கம். இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வர்.

    இந்நிலையில் இந்த சீசன் காலத்தில் இங்கு வரும் டால்பின் மீன்கள் படகில் அடிபட்டும், பல்வேறு இயற்கை மாறுபாடு காரணமாகவும் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று கோடியக்கரை மீன்பிடி இறங்குதளம் எதிரே சுமார் 5 அடி நீளமுள்ள 40 கிலோ எடையுள்ள டால்பின் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.

    தகவல் அறிந்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் சென்று இறந்து கிடந்த டால்பினை கடற்கரையில் புதைத்தனர்.

    வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையத்தில் சோதனை நடத்திய போலீசார் ரெயிலில் இருந்து அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். இதில் 220 கிலோ ரேசன் அரிசி சிக்கியது.
    மயிலாடுதுறை:

    தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு மாதம்தோறும் இலவச அரிசி வழங்கி வருகிறது. இதனை சிலர் முறைகேடாக வாங்கி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ரேசன் அரிசியை பதுக்கி அண்டை மாநிலங்களுக்கு அனுப்பும் கும்பலும் செயல்பட்டு வருகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரில் தமிழக அரசு அதிகாரிகளை கொண்ட குழு மூலம் அதிரடி வாகன சோதனை நடத்தி ரேசன் அரிசி கடத்தலை தடுத்துவருகிறது. இதை தொடர்ந்து ரெயில்களிலும் ரேசன் அரிசி கடத்தும் சம்பவம் நடைபெறுகிறது. ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதை தடுக்க திருச்சி கோட்ட ரெயில்வே கண் காணிப்பாளர் ஆனி விஜயா உத்தரவிட்டதின் பேரில் ரெயில்வே போலீசார் திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட ரெயில் நிலையங்களில் இருந்து செல்லும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தி ரேசன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் - மயிலாடுதுறை ரெயில் நேற்று மாலை 5.30 மணி அளவில் வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையம் வந்தது. அதில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் ஏட்டுக்கள் அய்யப்பன், இளவழகன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரெயிலில் கிடந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் 220 கிலோ ரேசன் அரிசி சிக்கியது.

    போலீசாரை கண்டதும் ரேசன் அரிசியை கொண்டு வந்த நபர்கள் தப்பி சென்று விட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி நாகை குடிமை பொருள் புலனாய்வு பிரிவில் ஓப்படைக்கபட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யத்தில் நாளை மின்நிறுத்தம் ஏற்படும் என்று மின்வாரிய உதவிப் பொறியாளர் பாபு தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (17-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாய்மேடு, ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், வேதாரண்யம் நகரம் மற்றும் கிராமப்பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று வாய்மேடு மின்வாரிய உதவிப் பொறியாளர் பாபு தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம் அருகே சமையல் செய்த போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் தீயில் கருகினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள உடைய தேவன்காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி அபிராமி (22). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

    சம்பவத்தன்று அபிராமி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயலலிதா மறைவால் மனமுடைந்த அ.தி.மு.க. பிரமுகர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள காமநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (60).அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். மேலும் 1980- ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் இணைந்து கட்சி பணியாற்றி வந்தார். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் கலியமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டார்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இது குறித்து பொறையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பூச்சு மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர் தீராத வயிற்று வலியால் அவதி பட்டு வந்தாராம்.

    இவர் கடந்த 10-ந் தேதி காலை வயிற்று வலியால் அவதிப்பட்டவர் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் மயங்கி இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளிக்கப்பட்டது. திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 12-ந் தேதி மாலை தனபாக்கியம் இறந்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவதாஸ் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    வேதாரண்யம் அருகே அனுமதியின்றி மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று வேதாரண்யம் ராஜாஜி பூங்கா பின்புறம் அரசு அனுமதியில்லாமல் மது விற்றுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42) என்பவரை பிடித்து வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    சீர்காழியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 3ஆயிரம் மாணவ மாணவிகள் மவுன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 3ஆயிரம் மாணவ மாணவிகள் மவுன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

    சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி, மாணவ மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள், முதல்வர்கள் உள்பட சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர். பின்னர் பாரதி எம்.எல்.ஏ. தலைமையில் பள்ளி முதல்வர் ஜோஷ்வா பிரபாகரசிங், கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், சந்திரசேகர், மாவட்ட பேரவை செயலாளர் நற்குணன், முன்னிலையில் மவுன ஊர்வலமாக புறப்பட்டனர்.

    பிடாரி வடக்கு வீதி, பிடாரி மேலவீதி, மருத்துவமனை சாலை, கச்சேரி ரோடு, வழியாக தமிழிசை மூவர் மணிமண்டபம் சென்று ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளி துணை முதல்வர் சரோஜா, கல்லூரி துணை முதல்வர் ஜெயந்திகிருஷ்ணா, மேலாளர் சுதாகர், வைத்தீஸ்வரன்கோவில் பேரூர்செயலாளர் போகர்ரவி, ஒன்றிய மாணவர் அணி துணை செயலாளர் ரமேஷ்பாபு, நகர பேரவை செயலாளர் மணி, தொகுதி இணை செயலாளர் பாரிவள்ளல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, மாவட்ட தொழில்நுட்பபிரிவு துணை செயலாளர் பரணிதரன், மாவட்ட பிரதிநிதிகள் ராமையன், கார்த்தி, ஆசிரியர் கோவிநடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    டி.எஸ்.பி. சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    வேதாரண்யம் அருகே கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (70). இவரது மனைவி முத்தம்மாள் (65). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ராமசாமி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். மகன் ராமசாமிக்கும், தந்தை சுப்பிரமணியனுக்கும் நிலம் பிரிப்பது சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 30.6.15-ம் தேதி முத்தம்மாள் கடைவீதிக்கு சென்று திரும்பும்போது மகன் ராமசாமி மற்றும் தியாகராஜன், ராஜேஷ், ராஜ்மோகன் ஆகிய நால்வரும் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்தம்மாளை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமி, தியாகராஜன், ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட ராஜ்மோகன் (39) தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் பழனிவேல் வேதாரண்யம் ராஜாஜிபூங்கா அருகே ரோந்து சென்ற அங்கு நின்றிருந்த ராஜ்மோகனை 20 மாதங்களுக்கு பிறகு நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    வேதாரண்யம் அருகே பள்ளியில் கணினி பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமையாசிரியராக நடராஜன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி மாலை பள்ளியில் உள்ள கணினி அறை மற்றும் பள்ளியை பூட்டி விட்டு சென்றுள்ளார். பிறகு 12-ம் தேதி காலை பள்ளியை திறந்து பார்த்தபோது ஒருஅறையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலுள்ள கணினி கருவிகள் சிபியூ-2, மவுஸ்-2, ஸ்பீக்கர்-4 ஆகிய ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கணினி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து தலைமையாசிரியர் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    ×