என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
- கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பில்,உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- உத்தனப்பள்ளியில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருட்டிணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரி, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உத்தனப்பள்ளியில், 88 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பில்,உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மண்டல செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலளார் சிவராமன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் வேல்கணேசன், வேப்பனப்பள்ளி தொகுதி செயலாளர் சிவசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ராவணன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீசபாண்டியன், ராசா அம்மையப்பன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் உள்பட பலர் கண்டன உரை ஆற்றினார்கள்.
இந்த போராட்டத்தில், கெலமங்கலம் அருகே அயர்னபள்ளி, நாகமங்கலம், உத்தனப்பள்ளி ஊராட்சிகளில் 3,800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை வெளியேற்றத் துடிப்பதாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், உத்தனப்பள்ளியில் விவசாயிகள் தொடர்ந்து 88 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பப்பட்டன.






