என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி அருகே பெண்ணின் கழுத்தை நெரித்து தாலி செயின் பறிப்பு டிப்டாப் உடை அணிந்த மர்ம நபர் துணிகரம்
- தேன்மொழியின் கழுத்தை நெரித்த இளைஞர் தங்கத்தாலி, தோடு, மூக்குத்தி போன்றவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.
- கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ஊராட்சி, மேலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனபால் மனைவி தேன்மொழி (வயது 37). இவர் நேற்று மாலை இவரது பூந்தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக, இரு சக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் உடை அணிந்த மர்மநபர் ஒருவர், தனக்கு தாகமாக இருப்பதாகக் கூறி, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
இதனை நம்பிய தேன்மொழி, அந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது தேன்மொழியின் கழுத்தை நெரித்த அந்த இளைஞர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலி மற்றும் தோடு, மூக்குத்தி ஆகியவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார், பெண்ணிடம் தங்க நகைகளை பறித்த மர்ம நபரை பிடிக்க, கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.