என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளை விரட்டி பிடித்த மாநகராட்சி பணியாளர்கள்
- பத்து பைப் பகுதி ஆகிய இடங்களில் மாடுகளை விரட்டி, விரட்டி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கையும் விடப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிவதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், மாநகராட்சி கூட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உத்தரவின்பேரில், நகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில், துப்பரவு மேற்பார்வையாளர்கள் ரமேஷ், கிரி, மோகன் மற்றும் பணியாளர்கள், ஓசூர் பஸ் நிலையம், உழவர் சந்தை, எம்.ஜி.ஆர் மார்க்கெட், காமராஜ் காலனியில் உள்ள பத்து பைப் பகுதி ஆகிய இடங்களில் மாடுகளை விரட்டி, விரட்டி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடிபட்ட மாடுகள், சிறிது நேரத்தில் நைசாக தப்பித்தும், திமிறிக் கொண்டும் ஓடியதால் சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்து அங்கும், இங்கும் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்வின்போது 12 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கையும் விடப்பட்டது.






