search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் முகுல் வாஸ்னிக் ஆலோசனை
    X

    தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் முகுல் வாஸ்னிக் ஆலோசனை

    • பா.ஜ.க. அரசின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை.
    • திருடர்களையும் முறைகேடு செய்தவர்களையும் அம்பலப்படுத்திய ராகுல் காந்தியை தற்போது மோடி அரசு குறி வைக்கிறது.

    சென்னை:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்க விவகாரத்தில் நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் நேரடியாக சென்று ஆலோசித்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள 74 காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்

    அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் தொடர்ந்து ஒரு மாதம் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    எந்தெந்த மாவட்டங்களில் எந்த தேதிகளில் எந்த மாதிரியான போராட்டங்கள் நடத்தப்படும் என்பது பற்றி இன்று மாலையில் அறிவிக்கப்படுகிறது. முன்னதாக முகுல் வாஸ்னிக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    அதானியின் போலி நிறுவனங்கள் தொடர்பாகவும் பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் இரண்டு சாதாரண கேள்விகளைத்தான் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் எழுப்பினார். அவர் பேசிய பேச்சும், மல்லிகார்ஜுன கார்கே பேசிய பேச்சும் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    தங்கள் மீதான தவறுகளை மறைக்க பாஜக அரசு திசை திருப்பும் உத்திகளை கையாண்டு வருகிறது. லண்டனில் ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக பேசினார் என்பது தவறு. இந்தியாவில் நடப்பது எங்கள் உள்நாட்டு பிரச்சினை இதற்கு நாங்களே தீர்வு காண்போம் வெளியில் இருந்து தீர்வை தேட மாட்டோம் என்றுதான் அவர் பேசினார்.

    4000 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்ற ராகுலால் எப்படி பின்தங்கிய மக்களை குறிவைத்து விமர்சிக்க முடியும். சூரத் கோர்ட் தீர்ப்பளித்து 30 நாட்கள் அவகாசம் கொடுத்த பிறகும் உடனடியாக தகுதி நீக்கம் செய்ய காரணம் என்ன? ராகுல் காந்தியைப் பார்த்து பாஜக பயப்படுகிறது.

    பா.ஜ.க. அரசின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவோம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளில் மெத்தனம் காட்டப்படுகிறது.

    திருடர்களையும் முறைகேடு செய்தவர்களையும் அம்பலப்படுத்திய ராகுல் காந்தியை தற்போது மோடி அரசு குறி வைக்கிறது. ஆனால் வருகிற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் ராகுல்காந்தி மீதான வழக்கைப் பொருத்தவரை 2019-ல் தொடரப்பட்டது 2022ல் புகார் கொடுத்தவரே தடை ஆணை வாங்கினார்.

    பின்னர் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு பிறகுதான் புகார் கொடுத்தவர் தனது தடையாணையை திரும்பப் பெற்றுள்ளார்.

    இந்த காலகட்டங்களில் காங்கிரஸ் சட்டப்பிரிவு முறையாக இந்த வழக்கை கையாண்டு இருந்தால் பிரச்சனை வந்திருக்காதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சரியான பதிலை அளிக்காமல் மழுப்பினார்.

    ஆலோசனை கூட்டத்தில் எம்பிக்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாநில நிர்வாகிகள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி தணிகா சலம், தாமோதரன், ராம சுகந்தன், தளபதி பாஸ்கர், ஜோதி பொன்னம்பலம், அகரம் கோபி, விஜய சேகர், மாவட்ட தலைவர்கள் ரஞ்சன்குமார், எம்.எஸ்.திரவியம், சிவராஜ சேகரன், டெல்லி பாபு, தமிழ்ச்செல்வன், துறைமுகம் ரவிராஜ், கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×