search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை அமைச்சர் செஞ்சிமஸ்தான் பேட்டி
    X

    அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், இ.பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

    உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை அமைச்சர் செஞ்சிமஸ்தான் பேட்டி

    • திண்டுக்கல் அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கட்டப்படும் வீடுகள் தரமானதாக உள்ளது.
    • விரைவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்க உள்ளார்.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமை ஒருங்கிணைத்து தோட்டனூத்தில் முகாம் அமைக்க திட்டமிட்டப்பட்டது. இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி 321 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஒவ்வொரு வீடும் தலா ரூ.4.75 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி தொடங்கியது. தற்போது 210 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    மற்ற வீடுகள் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகளை இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் விசாகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் செஞ்சிமஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    இப்பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் வாழ் தமிழர்களுக்காக கட்டப்படும் வீடுகள் தரமானதாக உள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் விரைவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்க உள்ளார்.

    தமிழக மாணவர்கள் இனி எக்காலத்திலும் வெளிநாடுகளில் சென்று படிக்கின்ற நிலையை உருவாக்காத வகையில் முதல்-அமைச்சர் செயலாற்றி வருகிறார். உக்ரைனில் இருந்து மருத்துவம் மற்றும் இன்னும் பிற படிப்புகளுக்காக சென்று பாதியில் படிப்பை தொடரமுடியாமல் திரும்பியவர்களுக்கு தடையின்றி கல்வியை தொடர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் தமிழகத்திலேயே கல்வியை தொடர முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார்.

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களை நாங்கள் இங்கு வருமாறு அழைக்கவில்லை. சூழ்நிலை காரணமாக அவர்கள் இங்கு வருகின்றனர். தமிழக பாரம்பரிய எண்ணத்தின் அடிப்படையில் தாயுள்ளத்தோடு அவர்களை வரவேற்று பாதுகாத்து வருகிறோம். மேலும் இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலை மனதில் கொண்டு அங்குள்ள மக்களுக்கும் முதல்-அமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

    ஏற்கனவே நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் 2-ம் கட்டமாக ரூ.123 கோடி மதிப்பில் அரிசி, பால்பவுடர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வக்புவாரிய சொத்துக்கள் சுமார் 500 கோடி மதிப்பீட்டில் 11 இடங்கள் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டதால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாமாக முன்வந்து அந்த இடத்தை ஒப்படைத்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×