search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் என்னென்ன? பட்டியலிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்
    X

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் என்னென்ன? பட்டியலிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்

    • அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது.

    அனைத்துத் துறைகளிலும் பொதுமக்கள் பயன் பெற கூடிய வகையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் பட்டா இல்லா இடங்களில் வசிப்பவர்கள் புதிய மின் இணைப்புகள் வழங்க பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மின் இணைப்புகள் வழங்கிட ஆவன செய்யப்படும்.

    தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன அதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்து இன்று மக்கள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். நமது பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி இந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே நமது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரூ.77.49 கோடி மதிப்பில் 22251 ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்து கொடுத்துள்ளார் நமது முதல்வர்.

    தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.2756 கோடி மதிப்பில் மகளிர் பெற்றுள்ள கடன் தொகையை ஒரே உத்தரவில் முதலமைச்சர் தள்ளுபடி செய்துள்ளார். தற்போது பால் விலை, பெட்ரோல் விலை ஆகியவை குறைக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமில்லாமல் பெண்களின் வாழ்வு மேம்படுத்துவதற்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து அதை சட்டமாக்கி மேலும் பெண்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள ஆணை வழங்கிய இந்திய திருநாட்டில் ஒரே முதல்வர் நமது முதல்வர். மேலும் அனைத்து பகுதிகளிலும் மேம்பாலம் பணிகள், சாலைகள் சீரமைப்பு பணிகள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்பதற்காக இன்றைக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த அரசுக்கும் நமது முதல்வருக்கும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தர வேண்டும் என இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இன்றைய தினம் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுக்கள்.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் (உத்திரமேரூர்) சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் க.தேவேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஸ்ரீதேவி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் சேகர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×