search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமற்ற தீவனத்தால் பால் உற்பத்தி பாதிப்பு
    X

    தரமற்ற தீவனத்தால் பால் உற்பத்தி பாதிப்பு

    • ஆவின் நிறுவனம் 50 சதவிகித மானியத்தில் உலர்தீவனம் வழங்குகிறது.
    • அந்த தீவனத்தை கால்நடைகள் உட்கொள்வதில்லை. அப்படியே தின்றாலும் உற்பத்தியாகும் பாலின் தரமும் குறைவாக உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கால் நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆவின் நிறுவனத்தில் பால் சப்ளை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை பெற்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கால்நடைகள் வளர்ப்போருக்கு ஆவின் நிறுவனம் 50 சதவிகித மானியத்தில் உலர்தீவனம் வழங்குகிறது.

    இந்நிலையில் ஆவின் வழங்கும் தீவனம் தரமாக இல்லை என்றும், போதுமான அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆவின் வழங்கும் தீவனம் தரம் குறைவாக இருப்பதால் அவற்றை தண்ணீரில் கரைக்கும்போது முழுமையாக கரைவதில்லை. இதனால் அந்த தீவனத்தை கால்நடைகள் உட்கொள்வதில்லை. அப்படியே தின்றாலும் உற்பத்தியாகும் பாலின் தரமும் குறைவாக உள்ளது.

    அத்துடன் ஆவின் வழங்கும் தீவனம் போதுமானதாக இல்லாததால் தனியாரிடம் சில விவசாயிகள் தீவனத்தை வாங்குகின்றனர். அந்த தீவனம் மூட்டை ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை விற்கப்படுகிறது.

    மேலும் தனியார் விற்கும் தீவனங்களை சாப்பிடும் கால்நடைகளுக்கு உடல்நல பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே ஆவின் வழங்கும் தீவனத்தின் அளவை உயர்த்தி வழங்குவதுடன் தரத்தையும் உறுதி செய்யவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    இது தொடர்பாக ஆவின் தரப்பில் கூறுகையில் தீவன தேவை மாதத்திற்கு 320 டன் என்ற நிலையில் தற்போது 200 டன் அளவுக்கே கொள்முதல் செய்யப்படுகிறது.இந்த அளவு உயர்த்தி வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    தற்போது ஈரோடு மாவட்டத்திலிருந்து தீவனம் கொள்முதல் செய்யப்படுகிறது.அதன் தரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×