என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓம் சக்தி பக்தர்களின் பால்குட ஊர்வலம்
- கணபதி ஹோமம் நடத்தப்பட்டு இருமுடி அணியும் விழா தொடங்கியது.
- அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, முதல் முறையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்ஷாபேட்டையில் உள்ள ஓம் சக்தி மன்றம் சார்பில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டு இருமுடி அணியும் விழா தொடங்கியது.
இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். மேலும் விழாவின் முக்கிய நாளான நேற்று ஓம் சக்தி பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு பாட்ஷாபேட்டையில் உள்ள வீதிகளின் வழியாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஓம் சக்தி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, முதல் முறையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இந்த ஊஞ்சல் உற்சவத்தில் பம்பை வாத்தியங்கள் முழங்க தாலாட்டுப்பாடி அம்மனை தூங்க வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் , பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து, ஊஞ்சல் உற்சவத்தை கண்டு ரசித்தனர். இதனை தொடர்ந்து இரவு இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.






