search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியரை சோதனை சாவடி வழியாக  கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் மருத்துவக்கழிவுகள் - நிரந்தரமாக தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை படத்தில் காணலாம்.

    புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் மருத்துவக்கழிவுகள் - நிரந்தரமாக தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    • தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன.
    • டிரைவர்களுக்கு லோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கேரளா வியாபாரிகள் அளிப்பதாக தெரிகிறது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன.

    நோய் தொற்று பாதிப்பு

    இந்த வாகனங்களில் அங்குள்ள வியாபாரிகள், மருத்துவர்கள் தங்களிடம் சேரும் குப்பைகள் மற்றும் கழிவுகளை ஏற்றி தமிழகத்திற்கு அனுப்பி விடுகின்றனர். பெரும்பா லும் காய்கறி கொண்டு செல்லும் லாரிகளின் டிரைவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தென்காசிக்கு ஏற்றி வருகின்றனர்.

    பின்னர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளுக்கு கொண்டு சென்று கொட்டிவிடுகின்றனர். இதன் மூலம் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிறது.

    மருத்துவக்கழிவுகள்

    கடந்த சில மாதங்களாக ஆலங்குளம்-தென்காசி சாலை மற்றும் ஆலங்குளம்-நெட்டூர் சாலைகளில் மர்மநபர்கள் அந்த மருத்துவக்கழிவுகளை கொட்டி அழித்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர், தாசில்தார் மற்றும் ஆலங்குளம் போலீசாருக்கு பலமுறை புகார் அளித்திருப்பதாகவும், எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் அப்பகுதியினர் புகார் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள தோட்ட பகுதியில் கொட்டுவதாக வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கங்காதரன் ஆலங்கு ளம் போலீசில் புகார் அளித்தார்.

    கைது

    அதன் பேரில் இன்ஸ்பெ க்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் அங்கு சென்று முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கழிவுகளை கொட்ட முயன்ற ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பார்த்திப ராஜாவை கைது செய்தனர். மேலும் தோட்ட உரிமையாளர் முருகன் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்திற்கு கொண்டு செல்லும் டிரைவர்களுக்கு லோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கேரளா வியாபாரிகள் அளிப்பதாக தெரிகிறது. இந்த கும்பலுக்கும், புளியரை சோதனை சாவடியில் உள்ள சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×