search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாசன வாய்க்கால் பராமரிப்புக்காக அளவீட்டு பணிகள்
    X

    பாசன வாய்க்கால் பராமரிப்புக்காக அளவீட்டு பணிகள்

    • வாய்க்கால்கள் மூலமும் பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது.
    • தலைமை நில அலுவலர் செல்வன் ஆகியோர் அளவீட்டுப் பணிகள் மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், கரூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அமராவதி ஆற்றின் மூலம் பழைய ஆயக்கட்டு நிலங்களும், பிரதான கால்வாய் மூலம் புதிய ஆயக்கட்டு நிலங்களும் பாசனம் பெறுகின்றன. அத்துடன் ராஜவாய்க்கால்கள், ராமகுளம், கல்லாபுரம் உள்ளிட்ட வாய்க்கால்கள் மூலமும் பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது.

    பிரதான வாய்க்காலில் இருந்து கிளைக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில் பல இடங்களில் நீர் திருட்டு நடைபெறுவதால் கடை மடைக்கு தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளது என்று விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் பாசன வாய்க்கால்களுக்கு அருகிலுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி ,மலையாண்டிபட்டினம் பகுதியில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து மேற்கொள்ளும் அளவீட்டுப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மடத்துக்குளம் தாசில்தார் செல்வி முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் தலைமை நில அலுவலர் செல்வன் ஆகியோர் அளவீட்டுப் பணிகள் மேற்கொண்டனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ரோந்து மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் வாய்க்காலின் இரு கரைகளிலும் பாதைகள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் விரயமாவதைத் தடுக்கும் வகையில் பராமரிப்புப் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கடை மடை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×