search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் நூற்றாண்டுகள் பழமையான  ஊரணிகுளத்தை சுற்றி பேவர்பிளாக் சாலை  அமைத்து சீரமைக்க மேயர் உத்தரவு
    X

    முள்ளக்காடு ஊர் முகப்பில் உள்ள நூற்றாண்டு பழமையான ஊரணி குளத்தை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் பார்வையிட்ட காட்சி.

    தூத்துக்குடியில் நூற்றாண்டுகள் பழமையான ஊரணிகுளத்தை சுற்றி பேவர்பிளாக் சாலை அமைத்து சீரமைக்க மேயர் உத்தரவு

    • புதிய சாலைகள் அமைய உள்ள பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
    • தெற்கு மண்டல அலுவலகத்தில் அலுவலர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெறப் போகும் பணிகள் குறித்தும், மழை நீர் தேங்கும் பகுதிகளில் புதிய வடிகால் வசதி, மற்றும் புதிய சாலைகள் அமைய உள்ள பகுதிகளையும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு ஆர்வமுடன் திரண்டு வந்து மேயரை வரவேற்ற பொதுமக்களிடம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகில் நீர் தேங்கும் பகுதி, ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பொது சுடுகாடு செல்லும் பாதை களில் வரும் நாட்களில் மழை நீர் தேங்காதவாறு வரும் நாட்களில் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் நேற்று முழுவதும் ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக தெற்கு மண்டல அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    அப்போது சொத்துவரி, தண்ணீர் கட்டண வசூலை துரிதப்படுத்துமாறும், பிளான் அப்ரூவல் குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடுமாறும் அதிகாரிகள், அலுவலர்களிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முள்ளக்காடு ஊர் எதிரில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஊரணிகுளம் தற்போது சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனை மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது குளத்தின் மேல்பரப்பு முழுவதும் பேவர்பிளாக் சாலை அமைத்து அதன் ஒரத்தில் கைப்பிடி கம்பிகள் வைத்து,பொதுமக்கள் ஒய்வெடுக்க ஏதுவாகவும், பொதுமக்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் பாதசாரிகள் பயன்படுத்த கழிப்பறைகள் அமைக்கவும், சுற்றிலும் மரங்கள் வைத்து, பென்சிங் அமைத்து பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஊரணி குளத்தினை சீரமைத்து இதுபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாகும். அதனை நிறைவேற்றி தரும் வகையில் மாநகர மேயர்ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அறிந்த மேயருக்கு முள்ளக்காடு வியாபாரிகள் சங்க தலைவர் முனிய தங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பாராட்டி நன்றி தெரிவித்தனர். மேயருடன் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் முத்துவேல், விஜய குமார்,ராஜதுரை சுயம்பு, பட்சிராஜ், வெற்றிச்செல்வன் மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையர் ராமசந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி, உதவி செயற்பொறியாளர் குறள்செல்வி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×