என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோர்ட்டு அருகே வெடிகுண்டு வீசி ரவுடி கொலை- 5 பேர் கொண்ட கூலிப்படை தாக்குதல்
- பலத்த காயம் அடைந்த வாலிபர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
- வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் இன்னொரு வாலிபரும் பலத்த காயம் அடைந்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு கோர்ட்டு அருகில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
செங்கல்பட்டு கோர்ட்டு அருகில் 'ஜூஸ் கோர்ட்' என்ற பெயரில் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் இன்று காலை 10.30 மணி அளவில் கோர்ட்டுக்கு வந்திருப்பவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் என பலர் குளிர்பானங்களை வாங்கி குடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த வாலிபர் ஒருவரை குறிவைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. வாலிபரின் மீது சராமரியாக நாட்டு வெடிகுண்டுகளும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.
இதில் வாலிபர் அங்கேயே சுருண்டு விழுந்தார். அப்போது மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கொலை வெறியுடன் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே விழுந்து கிடந்த வாலிபரை சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் இன்னொரு வாலிபரும் பலத்த காயம் அடைந்தார். அவரும் ரத்த வெள்ளத்தில் அருகில் கிடந்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு டவுண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஜூஸ் கடை உடனடியாக மூடப்பட்டது.
கொலையுண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த வாலிபர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொலையுண்ட வாலிபர் யார்? என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் யார்? என்பது அடையாளம் தெரிந்தது.
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்த லோகேஷ் என்பவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கொலையுண்ட லோகேஷ் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது 2 கொலை வழக்குகளும், 4 வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இதனால் பழிக்கு பழி வாங்கும் வகையில் அவரது எதிரிகள் கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
காயம் அடைந்த நபர் யார் என்பது தெரியவில்லை. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த போது லோகேஷ் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவரை கொலை செய்த கும்பல் திட்டம் போட்டு கோர்ட்டு அருகில் வைத்தே இந்த துணிகர கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அவர்கள் யார்? என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டது.
இதில் புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலே கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் தகவல் மட்டும் தெரியவந்துள்ளது. அவர்கள் எதற்காக லோகேசை கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக செங்கல்பட்டு டி.எஸ்.பி. பரத், டவுண் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டுப்பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






