என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிளில் 10 கிலோ சந்தன கட்டை கடத்தியவர் கைது - பணம் பறிமுதல்
- கிருஷ்ணகிரியில் மோட்டார்சைக்கிளில் கடத்திய 10 கிலோ சந்தன கட்டை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், புதுக்கோட்டையை சேர்ந்தவரை கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் போலீசார் விசாரித்ததில் வண்டியில் சந்தனகட்டைகள் கடத்தியது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் போலீசார் நேற்று கிருஷ்ணகிரி - சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு சென்றனர். அப்போது விபத்தில் சிக்கிய ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் துரத்தி பிடித்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் ஜவுளி துணி போல ஒரு பெரிய அளவில் ஒரு பை இருந்தது. போலீசார் அதை திறந்து பார்த்தபோது 10 கிலோ சந்தன கட்டைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடியை சேர்ந்த அம்ஜத்அலி(வயது 47) என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் சந்தனக்கட்டையை கடத்தி வந்து, ஓசூரில் ஒருவரிடம் கொடுத்துவிட்டு, மீதமிருந்த 10 கிலோ சந்தன கட்டையை மீண்டும் அந்தியூருக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






