என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகை-பணத்தை மீட்டுக்கொடுத்த ஆட்டோ டிரைவர்
- நகை-பணத்தை தொலைத்த பெண்ணின் கைப்பையை ஆட்டோ டிரைவர் மீட்டுக்கொடுத்தார்.
- அவரை போலீஸ் துணை கமிஷனர் பாராட்டினார்.
மதுரை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கற்பகம் என்பவர் கடந்த 4-ந் தேதி திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். அவர் பாண்டி கோவிலில் இருந்து ஆட்டோவில் திருமண மண்டபத்துக்கு சென்றார்.
அப்போது கற்பகம் வைத்திருந்த கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்து விட்டு திருமண மண்டபத்தில் இறங்கி விட்டார். சிறிது நேரம் கழித்து பையை ஆட்டோவில் தவறி விட்டுச்சென்றது நினைவு வந்தது. கற்பகம் செய்வதறியாமல் தவித்து நின்றார்.
இதற்கிடையே கற்பகத்தை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் தனது ஆட்டோவில் ஒரு கைப்பை பார்த்தார். அதில் 2 1/2 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்து 500 ரொக்கம், வீட்டு சாவி மற்றும் செல்போன் ஆகியவை இருந்தன. உடனே முருகன் அந்த பையை மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, கற்பகத்தின் பை என தெரியவந்தது. இதையடுத்த அந்த பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆட்டோவில் கிடந்த கைப்பையை போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் முருகனுக்கு தெற்கு வாசல் போலீஸ் துணை கமிஷனர் சண்முகம், கீரைத்துறை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகபெருமாள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.






