என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரி சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.
நெரிசலில் சிக்கி தவிக்கும் மதுரை அரசு ஆஸ்பத்திரி சாலை
- மதுரை அரசு ஆஸ்பத்திரி சாலை நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
- பொதுமக்களின் சிரமத்தை போக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு பலகை வைத்தும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
மதுரை
தென் மாவட்டங்களில் மிகப்பெரிய மருத்துவமனையாக, மதுரை அரசினர் ராஜாஜி ஆஸ்பத்திரி திகழ்கிறது. இது தோராயமாக 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உடையது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர். மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை, 3 மையங்களை உள்ளடக்கியது.
இதன் ஒரு பகுதியாக பழைய அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு உள்பட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. மதுரை புதிய அரசினர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு துறைகள் செயல்படுகின்றன. அடுத்தபடியாக தமிழக அரசின் 'மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி'. இது புதிய அரசினர் மருத்துவமனை எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அரிய நோய்களுக்கும் சர்வதேச தரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் போதிய வாகன நிறுத்தும் இடம் இல்லை. எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள், போக்குவரத்து சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டி உள்ளது. இதன் காரணமாக பனகல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எனவே அந்த சாலையின் இரு புறங்களிலும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், வாகனங்களை நிறுத்த அலை மோத வேண்டி உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகன நிறுத்தும் இடம் செயல்பட்டு வந்தது. எனவே நோயாளிகள் எந்தவித தொந்தரவும் இன்றி, வாகனங்களை ஆஸ்பத்திரி வளாக நிறுத்தும் இடத்தில் விட்டு சென்றனர்.
அங்கு தற்போது டெண்டர் விடப்படவில்லை. எனவே வாகன ஓட்டிகள் நிறுத்தும் இடம் இன்றி தவிப்பதாக குற்றச்சாட்டு இழந்து உள்ளது ஆனால், 'மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கனவே இட நெருக்கடி உள்ளது. இங்கு மீண்டும் வாகன நிறுத்தம் கொண்டு வந்தால், இடப் பற்றாக்குறை அதிகரிப்பதுடன் நோயாளிகளுக்கும் சிரமம் ஏற்படும்" என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதுவும் தவிர
மதுரை அரசினர் ராஜாஜி அமைந்து இருக்கும் பனகல் சாலை மிகவும் குறுகலானது. 2 ஆட்டோக்கள் ஒன்று சேர்ந்து போனாலே, ஒட்டுமொத்த சாலையும் அடைபட்டு விடும் என்ற நிலையில் தான், அங்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த நிலையில் தனியார் ஆட்டோக்கள் சாலையில் இருபுறமும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக தேவையின்றி காத்துக் கிடக்கின்றன. எனவே அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதுவும் தவிர ஆஸ்பத்திரியின் வெளிப்புற நடைபாதைகளில், சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே "மதுரை அரசு ஆஸ்பத்திரி வெளிப்புற சுவரின் அருகில் சாலையோர வியாபாரிகளின் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்" என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி போலீசார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
இருந்தபோதிலும் அங்கு மீண்டும் கடைகள் முளைத்து வருகின்றன. இதனை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் மதுரை பனகல் ரோடு போக்குவரத்து சாலைகள், ஜன நெரிசலில் சிக்கி பிதுங்கி வழிகிறது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை பழைய பிரேத பரிசோதனை கிடங்கு அருகே, வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். ஆனால் அந்த இடத்தில் தற்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. எனவே மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை வாகன நிறுத்தும் இடத்துக்கு மாநகராட்சி உடனடியாக டெண்டர் விட வேண்டும். அடுத்தபடியாக வைகை ஆற்றங்கரை ஓரத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை, மாநகராட்சி 3-வது மண்டலம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இது தொடர்பாக வருவாய்த்துறை உதவி செயற்பொறியாளர் மனோகரன் கூறுகையில், "மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள மினி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன நிறுத்தமிடம் உள்ளது. இங்கு ஆஸ்பத்திரிக்கு வருவோர் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லலாம். ஆனால் பொது மக்கள் அவசரத்தில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தற்போது 7 மாடி கட்டிடம் எழுப்பப்பட்டு வருகிறது. அதில் வேலை பார்க்கும் ஊழியர்களில் பலர் இங்கு வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். அதேபோல ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வோரும் மினி பஸ் வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






