என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலை மலர் செய்தி எதிரொலி: ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட அதிகாரிகள் ஆய்வு
    X

    மூலபள்ளத்துகொட்டாய் பகுதியில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    மாலை மலர் செய்தி எதிரொலி: ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட அதிகாரிகள் ஆய்வு

    • மழைக் காலங்களில் அந்த ஆற்றில் அதிகளவிலான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு சிரமப் படுகின்றனர்.
    • அப்பகுதி மக்களின் குறைகள் மற்றும் பாலம் கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஹள்ளி ஊராட்சியில் மூல பள்ளத்து கொட்டாய் எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதிக்கு செல்லும் வழியில் குறுக்கே ஆறு ஒன்று செல்கிறது. மழைக் காலங்களில் அந்த ஆற்றில் அதிகளவிலான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு சிரமப் படுகின்றனர்.

    அதனால் தற்போது மழை காலத்துக்கு முன்பாகவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிக் கொடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இது குறித்த செய்தியை மாலை மலர் நாளிதழ் வெளியிட்டிருந்தது.அச்செய்தியின் எதிரொலியாக நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் நேரடியாக எர்ரபையனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசனுடன் மூல பள்ளத்து கொட்டாய் கிராமத்திற்கு சென்று இருந்தனர்.

    அங்கு அப்பகுதி மக்களின் குறைகள் மற்றும் பாலம் கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்காக பாலம் கட்டி தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள் ளார். இதனால் அப்பகுதி கிராம மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது எங்கள் பகுதி பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாலை மலர் நாளிதழுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

    மேலும் எங்கள் குறைகளை அறிந்தவுடன் கடைக் கோடி கிராமமான எங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதாக தெரிவித்த நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

    மேலும் இந்த ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×